செந்தமிழ் முருகன்

அன்னை தமிழ், காலத்தால் மூத்தது. தமிழனது வாழ்வியல், நாகரிகம், பண்பாடு போன்றவற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம் சான்றோர், இலக்கியங்களிலேயும் நல் இலக்கணங்களிலேயும் பதிவு செய்து வைத்துள்ளனர்.

     கடைச்சங்க நூல்களாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் தொகைநூல்களின் மூலமும், பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் வழியாகவும் நமது கலாச்சார மாண்பினை அறிய முடிகிறது.

     இத்தகைய இலக்கியங்களுக்கெல்லாம் இலக்கணமாய்த் திகழ்வது ஒல்காப்புகழ் தொல்காப்பியர் வகுத்த தொல்காப்பியம் ஆகும். இந்த நூல்களின் சான்று கொண்டுதான் தமிழர்களது வாழ்வியல் நெறிகளை உணர்ந்துகொள்ள முடிகிறது.

     கடைச்சங்க காலத்தின் இறுதியிலிருந்துதான் நமக்கு ஆதாரங்களும் பதிவுகளும் கிடைத்துள்ளன. கி.பி. 250-க்கும் முற்பட்ட கால வெளியிலிருந்து நமது பண்பாட்டு நெறிகள் கண்டுணர இத்தகைய இலக்கணங்கள், இலக்கியங்கள் பயன்படுகின்றன.

     ‘களப்பிரர்’ என்னும் வேற்று நாட்டவர் தமிழகத்தைக் கைப்பற்றியதற்கு முன்புள்ள காலத்தையே கடைச்சங்க காலத்தின் இறுதி என வரலாற்று ஆய்வாளர் திரு.மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற பெருமக்கள் கருதுகின்றனர்.

     தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டாகும்.

     கி.மு. 8-ஆம் நூற்றாண்டுக்கும், கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் தெய்வ வழிபாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பதைப் பார்ப்போம்.

     இந்தக் காலத்தை ஆய்வாளர்கள் தனித்தமிழ்ச் சமயம், என்றும் ஆரியக் கலப்புள்ள சமயம் நிலவிய காலம் என்றும் இரு கூறாகப் பிரிக்கின்றனர்.

     தனித்தமிழ்ச் சமயம் என்பது, ஆரியக் (வட இந்திய) கலப்பற்ற கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சமயம்.

     ஆரியக் கலப்புள்ள சமயம் என்பது, கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சமயமாகும்.

     அந்தக் காலகட்டத்திலே தமிழ் கூறும் நல்லுலகில், தமிழர் வணங்கிய தமிழ்த் தெய்வ வழிபாட்டைப்பற்றித்தான் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

     பழந்தமிழரின் அகவாழ்க்கையைப்பற்றியும் புறவாழ்க் கையைப்பற்றியும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். முல்லை நிலம், குறிஞ்சி நிலம், மருதநிலம், நெய்தல் நிலம் ஆகிய நிலப்பரப்புகளில் வாழ்ந்த பைந்தமிழ்ப் பெருமக்களின் வழிபாட்டுத் தெய்வங்களைப்பற்றிக் கூறுகிறது தொல்காப்பியம்.

            முல்லை நிலத்துக் கடவுள் : மாயோன் (திருமால்)
            குறிஞ்சி நிலத்துக் கடவுள் : சேயோன் (முருகன்)
            மருத நிலத்துக் கடவுள் : வேந்தன் (இந்திரன்)
            நெய்தல் நிலத்துக் கடவுள் : வருணன்

    பழந்தமிழ் நிலப்பரப்பு ‘நானிலம்’ எனத் தொல்காப்பியத்தால் வழங்கப்பட்டது. இந்த நால்வகை நிலத்திலும் வாழ்ந்த பண்டைய தமிழ்ப்பெருமக்கள், அவ்வந்நிலத்தில் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டு வந்தனர். இவர்களது வழிபாட்டுத் தன்மையினையும் இயற்கையோடு இணைந்த தெய்வ வழிபாட்டினையும் பார்க்கின்ற போது தமிழரது நாகரிகத்தின் தொன்மை தெரிகிறது.

     செந்தமிழ் நாட்டின் சொந்தக் கடவுள் முருகப்பெருமான். பழந்தமிழர் குறிஞ்சி நிலத்தின் கடவுளாய் முருகனை வாழ்த்தி வணங்கி வந்திருக்கின்றனர். குறிஞ்சி நிலப்பகுதி. மலையும் மலைசார்ந்த பகுதியுமாகும்.

     அம் மலை நிலத்திலேயே ஆதிமனித வாழ்வு தொடங்கியிருத்தல் வேண்டும். அவ்வாறு தொடங்கிய மூத்த இனம்தான் தமிழினம்.

     அவர்கள் மலைபடு பொருள்களைக்கொண்டு வளமுற வாழ்ந்தனர். மொழி வகுத்து, இசை பயின்று, காதல் நிறுவி, நயத்தக்க நாகரிக வாழ்வினை வாழ்வின் வேள்வியாய்க் கொண்டவர்கள், அந்த குறிஞ்சிவாழ் மக்கள்.

     தென்னகமாகிய தமிழகமே – பண்டைத் தமிழகமே உலகின் தொல்லகம் என்பது ஆய்வாளரது கணிப்பு.

     உலகின் முதல் நிலப்பகுதி தமிழகம் என்பதும், உலகின் முதல் மனித இனம் தமிழினம் என்பதும், முதல் நிலப்பகுதியாய்த் தோன்றிய நிலப்பகுதி மலைப்பகுதியாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நிலநூல் வல்லுநர் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்ட சுவையான செய்திகள்.

     கண்கவர் இயற்கை வனப்பின் வடிவழகாய்த் திகழும் நெடிதுயர்ந்த மலை, கடவுளின் தோற்றமாகும். மலையில் விளைந்து குவிந்து கிடந்த பொருள்களும், மலையிடத்தில் வாழ்வோராகிய மலைவாழ் பெருமக்களும், பிற உயிர்களும் கடவுளின் வடிவங்களான இயற்கையின் வடிவங்களே.

     இயற்கையின் எழில்வைப்போடு உயர்ந்து விளங்கும் குறிஞ்சி நிலம் மனித வாழ்வுக் கென்று இறைவனால் படைக்கப்பெற்ற இயற்கை மாளிகை. இயற்கையோடு இயைந்த, இணைந்த வாழ்வியல்தான் குறிஞ்சி நிலத்து மக்களுக்குச் சுகத்தைத் தந்தது.

     தண்ணீரே முதற்படைப்பு. அதிலிருந்து மலையும், அதனைச் சார்ந்து மண்ணும், மண்ணிலிருந்து மற்றவையெல்லாமும் விளைந்தன என்பது உலகத் தோற்றத்தை அறிவிக்க வந்த ஒரு புராணக் கருத்து. எனவே, மக்கள் பிறந்த இடம் மலையகம் என்பதாகத்தான் தெரிகிறது.

     ஆகவே, மனிதவாழ்வின் முதிர்ந்த அறிவுநிலை கடவுட்கொள்கை. கடவுட்கொள்கையில் முதலில் தோன்றியது சமூக வழிபாடு. மலைத்தெய்வம் முதல் தெய்வம். அவனே செந்தமிழ் முருகன்.

(ப.முத்துக்குமாரசாமி அவர்களின் செந்தமிழ் முருகன் எனும் நூலிலிருந்து, பக்கம்: 9-13)

Similar Posts